இன்றைய வாசகங்கள்

5ஆம் வாரம் ஞாயிறு

முதல் ஆண்டு

முதல் வாசகம்

உன் ஒளி விடியல் போல் எழும்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 58: 7-10

ஆண்டவர் கூறுவது: பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்துகொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக்கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு! அப்பொழுது உன் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்; உன் நேர்மை உனக்கு முன் செல்லும்; ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின் சென்று காக்கும். அப்போது நீ ஆண்டவரை மன்றாடுவாய்; அவர் உனக்குப் பதிலளிப்பார்; நீ கூக்குரல் இடுவாய்; அவர் `இதோ! நான்’ என மறுமொழி தருவார். உன்னிடையே இருக்கும் நுகத்தை அகற்றிவிட்டு, சுட்டிக் காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு, பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்; இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

பதிலுரைப் பாடல்

திபா 112: 4-5. 6-7. 8ய, 9 (பல்லவி: 4ய)

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சுவோர் இருளில் ஒளியென மிளிர்வர்.

4 இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்; அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர். 5 மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர். பல்லவி

6 எந்நாளும் அவர்கள் அசைவுறார்; நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர். 7 தீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது; ஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால் அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும். பல்லவி

8ய அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்; அவர்களை அச்சம் மேற்கொள்ளாது; 9 அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும். பல்லவி

 

இரண்டாம் வாசகம்

கடவுளைப் பற்றிய மறைபொருளை உங்களுக்கு அறிவித்தேன்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-5

சகோதரர் சகோதரிகளே, கடவுளைப் பற்றிய மறைபொருளை அறிவிக்க நான் உங்களிடம் வந்தபோது மிகுந்த சொல்வன்மையுடனோ ஞானத்துடனோ வரவில்லை. நான் உங்களிடையே இருந்தபோது மெசியாவாகிய இயேசுவைத் தவிர, அதுவும் சிலுவையில் அறையப்பட்ட அவரைத் தவிர, வேறு எதையும் அறியவேண்டும் என்று நினைக்கவில்லை. நான் உங்கள் நடுவில், வலுவற்றவனாய், மிகுந்த அச்சத்தோடும் நடுக்கத்தோடும் இருந்தேன். நான் பறைசாற்றிய செய்தி ஞானத்தின் கவர்ச்சியான சொற்களில் அமையவில்லை. ஆனால் அது தூய ஆவியின் வல்லமையை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது. உங்கள் நம்பிக்கைக்கு அடிப்படை மனித ஞானம் அல்ல, கடவுளின் வல்லமையே.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 8: 12

அல்லேலூயா, அல்லேலூயா! உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார். அல்லேலூயா.

 

நற்செய்தி வாசகம்

உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 13-16

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக்கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது. நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும். இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

 

பிப்ரவரி 06  ஞாயிறு – பொதுக்காலம் 05ம் ஞாயிறு

 

எசா  58 :  07-10;  01 கொரி  02 : 01-05;  மத்  05 : 13-16

 

நல்ல செயல்களே நம்மை பண்பட்டவர்களாக்கும். பகிர்ந்து கொடுத்து பண்படும் போது, நாம் ஒளிரும் விளக்காகி, பலருக்கு வழிகாட்டிகளாவோம். இதுவே நாம் விசுவசிக்கின்ற தெய்வத்திற்கு புகழ் சேர்க்கும். கொடுத்ததெல்லாம் கொடுத்தார் ஒருத்தர் வாழ்வதற்காக அல்ல, ஊரு வாழ உலகு வாழ, நாமும் இதே நோக்கோடு கொடுப்போம். வள்ளல்கள் ஆவோம்.

Posted in Uncategorized | Leave a comment

மறையுரைச் சிந்தனை

மறையுரைச் சிந்தனை (பிப்ரவரி 02)

ஆண்டவரின் நற்செய்தியை எடுத்துரைக்கும் சீடர்களாவோம்

கடலில் சென்றுகொண்டிருந்த ஒரு பெரிய கப்பலில் பயணம் செய்துகொண்டிருந்த குருவானவர், அங்கிருந்த பயணிகளுக்குப் போதித்துக் கொண்டிருந்தார். அவருடைய போதனையை அங்கிருந்தவர்கள் மிக ஆர்வமாய்க் கேட்டார்கள். குருவானவரின் போதனை முடிந்ததும், அவருடைய போதனையைக் கேட்டுக்கொண்டிருந்த பயணி ஒருவர் அவரிடத்தில் வந்து, “தந்தையே உங்களுடைய போதனையை மிக அருமையாக இருந்தது” என்றார். அதற்கு குருவானவர் அவரிடத்தில், “எதை வைத்து அப்படிச் சொல்லுகிறீர்?” என்று கேட்டார். அதற்கு அந்த பயணி, “நீங்கள் கடவுளுடைய வார்த்தையை உங்களுடைய உள்ளத்திலிருந்து எடுத்துரைத்தீர்கள். அதனால்தான் அப்படிச் சொன்னேன்” என்றார்.

இயேசுவின் நற்செய்திப் பணியைச் செய்கின்ற யாவரும் தங்களுடைய வார்த்தைகளை அல்ல, கடவுளுடைய வார்த்தையை எடுத்துரைக்கவேண்டும், அதுதான் மனிதருடைய உள்ளத்தை ஊடுருவிப்பாயும் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களை பணித்தளத்திற்கு அனுப்புகிறார். அப்போது அவர் கூறுகின்ற அறிவுரைதான் இன்றைய நற்செய்தி வாசகமாக அமைந்திருக்கிறது. இயேசு சீடர்களை பணித்தளத்திற்கு அனுப்புகிறபோது கூறுகின்ற முதன்மையான அறிவுரை, “பயணத்திற்கு கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஆனால் மிதியடி போட்டுக்கொள்ளலாம்; அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும்” என்பதுதான். இயேசு எதற்கு இப்படிச் சொல்லவேண்டும் என சிந்திக்கலாம். ஆனால் அதற்கு விவிலிய அறிஞர்கள் கூறுகின்ற கருத்து, எருசலேம் திருக்கோவிலில் நுழைகின்ற யாரும் தன்னிடம் இருக்கும் எதையும் உள்ளே எடுத்துக்கொண்டு போகக்கூடாது, வெறுமனேதான் செல்லவேண்டும். இயேசு நற்செய்தி அறிவிப்புப் பணியை ஆலயத்திற்கு பிரவேசிக்கின்ற திருப்பணியாகக் கருதியதால் என்னவோ, அவர் கையில் எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம் என சொல்லியதாக அவர்கள் கூறுவார்கள்.

விவிலிய அறிஞர்கள் கூறுகின்ற இன்னொரு விளக்கம் நற்செய்தியைப் பணியாளர்களை, அவர்கள் எந்த ஊரில் பணிசெய்கிறார்களோ அவர்கள் பராமரித்துக்கொள்ளவேண்டும். அது அவர்களுடைய தலையாயக் கடமையாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் கையில் எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம் என இயேசு கூறியதாகச் சொல்வார்கள்.

அடுத்ததாக இயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களிடம் என்ன செய்தியை மக்களுக்குப் போதிக்கச் சொன்னார் என சிந்தித்துப் பார்ப்பது மிகப் பொருத்தமானதாகும். அவர் அவர்களிடத்தில் போதிக்கச் சொன்ன முக்கியமான செய்தி மனமாற்றம்தான். சீடர்கள் ஆண்டவர் இயேசு தங்களுக்குச் சொன்னதுபோன்று மனமாற்றச் செய்தியை மக்களுக்கு அறிவித்தார்கள், அவர்களை இறைவன் பக்கம் திரும்பினார்கள்.

இந்த இடத்தில் நற்செய்திப் பணி செய்யும் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்று இருக்கின்றது. அதுதான் தங்களுடைய செய்தியை அல்ல, ஆண்டவருடைய செய்தியைப் போதிக்கவேண்டும் என்பதாகும். சீடர்கள் யாவரும் ஆண்டவர் இயேசு தங்களுக்குச் சொன்ன மனமாற்றச் செய்தியை மக்களுக்குப் போதித்து, அவர்கள்  மனமாறச் செய்தார்கள். அதைப் போன்று இறைவாக்குப் பணிசெய்யும் ஒவ்வொருவரும் தங்களுடைய செய்தியை அல்ல, இறைவனுடைய செய்தியை மக்களுக்கு எடுத்துரைக்கவேண்டும். அதுதான் ஆண்டவர் இயேசு தன்னுடைய பணியாளர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் எதிர்பார்க்கும் ஒன்றாக இருக்கின்றது.

நற்செய்திப் பணியாளர்கள் ஆண்டவருடைய சேதியை அறிவித்து, மக்களை மனமாற்றத்திற்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று சிந்தித்த நாம், ஆண்டவரின் நற்செய்தியை அறிவிக்கும் நற்செய்திப் பணியாளர்களுக்கு – குருக்களுக்கு – எத்தகைய மதிப்பளிக்கவேண்டும் என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இயேசு தன்னுடைய சீடர்களை கையில் எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம் என்று சொன்னார். எதற்காக என்றால் அவர்கள் பணியாற்றுகின்ற இடத்தில் இருக்கும் மக்கள்தான் அவர்களைப் பராமரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில். எனவே, இறைவார்த்தையைக் கேட்கின்ற மக்கள், அதனை அவர்களுக்கு அறிவிக்க பணியாளர்களை உரிய முறையில் கவனித்துக் கொள்கிறார்களா?, அவர்களுக்குத் தகுந்த மதிப்பளிக்கிறார்களா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களிடத்தில் கூறுவார், “நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால், அங்கிருந்து புறப்படும்வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள். உங்களை எந்த ஊராவது ஏற்றுக்கொள்ளாமலோ உங்களுக்குச் செவிசாயக்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும்போது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்” என்று. இயேசுவின் இவ்வார்த்தைகள், இறைவார்த்தையை – இறைவாக்கை எடுத்துச் சொல்லும் பணியாளர்களை – ஏற்றுக்கொள்ளாத மக்களுக்குக் கிடைக்கும் தண்டனையாக இருக்கின்றது.

ஆகவே, இறைவாக்கை எடுத்துச் சொல்லும் நற்செய்திப் பணியாளர்கள் இறைவாக்கை மட்டும் எடுத்துரைப்பவர்களாக இருக்கவும், இறைவார்த்தையைக் கேட்கும் மக்கள், அதன்படி நடக்கவும், அந்த இறைவாக்கை எடுத்துச் சொல்லும் நற்செய்தி பணியாளர்களுக்கு உரிய மதிப்புத் தரவும் ஜெபிப்போம், இவ்வாறு இறைவனுக்கு உகந்த மக்களாய் வாழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். – Palayamkottai, Fr. Maria Antonyraj, 2017.

மறையுரைச் சிந்தனை (பிப்ரவரி 02)

இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தல்

புத்தரிடம் சீடராகச் சேர்ந்து ஆசி பெறுவதற்காக தேவதத்தர் வந்தார். அவரிடம் புத்தர், “நான் உன்னை என்னுடைய சீடராக ஏற்றுக்கொண்டு உனக்கு ஆசிவழங்கவேண்டும் என்றால், நீ நாளை அதிகாலை 4 மணிக்குத் தனியாக வரவேண்டும்” என்றார்.

அதன்படி தேவதத்தர் மறுநாள் அதிகாலை 4 மணிக்குத் தனியாக புத்தர் இருந்த குடிசைக்கு வந்தார். அவரைக் கூர்ந்து நோக்கிய புத்தர், “நான் உன்னைத் தனியாகத்தானே வரச் சொன்னேன். எதற்காக இப்படி இரண்டு மூன்று ஆட்களை உன்னோடு கூட்டிவந்திருக்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு அவர், எங்கே தனக்குப் பின்னால் யாராது இருக்கிறார்களா? என்று திரும்பிப் பார்த்தார். அதற்கு புத்தர், “நான் வெளியே உள்ள ஆட்களைச் சொல்லவில்லை, உனக்கு உள்ளே இருக்கும் ஆட்களைப் பற்றிச் சொல்கிறேன்” என்றார்.

தேவதத்தர் தனக்குள் கவனித்தார், அப்போதுதான் அவருக்குத் உண்மை தெரிந்தது தனக்குள் தன்னுடைய மனைவி, பிள்ளைகள், தான் சேர்த்து வைத்திருக்கும் சொத்து, புகழ் எல்லாம் இருக்கிறது என்று. உடனே அவர் புத்தரிடம், “எனக்கு ஓராண்டு காலம் அவகாசம் கொடுங்கள். அதற்குள் நான் என்னையே தகுதிப்படுத்திக் கொண்டு, மீண்டுமாக வந்து உங்களுடைய சீடராகச் சேர்கிறேன்” என்று சொல்லிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்.

ஓராண்டு காலம் முடிந்த பிறகு அவர் மீண்டுமாக புத்தரிடம் வந்தார். இப்போது அவரைப் பார்த்த புத்தர், அவர் மிகவும் பக்குவமடைந்து தனி ஆளாக வந்திருப்பதை அறிந்து, அவரைத் தன்னுடைய சீடராக ஏற்றுக்கொண்டு, அவருக்கு ஆசி வழங்கினார்.

துறவு வாழ்வுக்கு/ பொது வாழ்வுக்கு தங்களையே அர்ப்பணிப்போர் எல்லாவற்றையும் துறந்துவிட்டு, தங்களையே அர்பணிக்கவேண்டும் என்பதை இந்த நிகழ்வானது நமக்கு உணர்த்துகின்றது.

இன்று திருஅவையானது ஆண்டவராகிய இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழாவைக் கொண்டாடுகின்றது. தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் அதிகாரம் 5:15  ல்  கூறுவதுபோல “வாழ்வோர் இனி தங்களுக்காக வாழாமல், தங்களுக்காக இறந்து, உயிர்த்த கிறிஸ்துவுக்காக வாழவேண்டும் என்று இவ்விழாவானது நமக்கு அழைப்புத் தருகின்றது.

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் மலாக்கி கூறுவார், “இதோ! நீங்கள் தேடுகின்ற தலைவர் திடிரென்று தம் கோவிலுக்கு வருவார்; நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ வருகிறார்” என்று. அதன்படி நற்செய்தி வாசகத்தில் தூய்மைச் சடங்கை நிறைவேற்றுவதற்காக குழந்தை இயேசுவை அதனுடைய பெற்றோர்கள் எருசலேம் ஆலயத்திற்கு கொண்டுவருகிறார்கள்.

“தலைப்பேறு அனைத்தும் எனக்கு அர்ப்பணம் செய்” (விப 13:2) என்ற ஆண்டவரின் வாக்கிற்கிணங்க இஸ்ரேயல் மக்கள் தங்களுடைய தலைப்பேறை ஆண்டவருக்கு காணிக்கையாகச் செலுத்திவந்தார்கள். அதன்படியே இயேசுவின் பெற்றோர்களும் அவரைக் கோவிலில் காணிக்கையாகச் செலுத்துகிறார்கள். இதன்மூலம் இயேசு இறைவனுக்குக் கையளிக்கப்பட்டவர் ஆகிறார்.

இறைவனுக்கு கையளிக்கப்படல் என்று சொல்கிறபோது நமது வாழ்க்கையை இறைவனுக்காக முற்றிலுமாகக் கையளித்து, அவரது விருப்பத்தின்படி வாழ்வதாகும். ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனுக்காகத் தன்னையே முற்றிலுமாகக் கையளித்து, அவரது விருப்பத்தின்படி வாழ்ந்தார் என்பதை நற்செய்தியில் பல இடங்களில் வாசிக்கின்றோம். குறிப்பாக கெத்சமனித் தோட்டத்தில் ஆண்டவர் இயேசு சிலுவைப் பாடுகளை ஏற்பதற்கு முன்பாக, “தந்தையே! உமக்கு விருப்பமானால் இந்தத் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும், என் விருப்படி அல்ல; உம் விருப்பப்படி நிகழட்டும்” (லூக் 22:42) என்கிறார்.

ஆக, இயேசு கிறிஸ்து தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர் தந்தையின் திருவுளத்தை ஏற்று நடந்தார் என்பதை நாம் மிக எளிதாகப் புரிந்துகொள்ளலாம். திருமுழுக்கின் வழியாக கடவுளுக்கு அர்பணிக்கப்பட்ட நாம் ஒவ்வொருவருமே இறைத் திருவுளத்தின்படி வாழவேண்டும் என்பதுதான் நமக்குத் தரப்படும் அழைப்பாக இருக்கிறது.

இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் கூறுவார், “ஊனும் இரத்தமும்கொண்ட பிள்ளைகளைப் போல கிறிஸ்துவும் அதே இயல்பில் பங்குகொண்டார்; இவ்வாறு சாவின்மேல் ஆற்றல் கொண்டிருந்த அலகையைச் சாவின் வழியாக அழித்துவிட்டார்” என்று. ஆம், இயேசு கிறிஸ்து தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி சாவின்மீது வெற்றிகொண்டார் என்றால், அவரது சீடர்களாக இருக்கும் நாமும் தந்தையின் திருவுளத்தின்படி நடந்து  சாவின் சக்திகளான வேற்றுமை, வறுமை, பஞ்சம், பசி, பட்டினி போன்றவற்றைக் களையவேண்டும்.

“சமூக நலன் என்ற அக்கினியில் சுயநல ஆசைகளைச் சுட்டேரிப்பதே தூய துறவு” என்பார் விவேகானந்தர். கடவுளுக்கு தங்களை முழுமையாக அர்பணிப்போரும் தன்னால ஆசைகளைத் துறந்து, தன் விருப்பத்தை நிறைவேற்றுவதை விடுத்து, இறைவிருப்பதை நிறைவேற்றவேண்டும்.

ஆதலால் ஆண்டவர் இயேசுவை கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழாவைக் கொண்டாடும் நாமும் இயேசுவைப் போன்று இறைத்திருவுளம் நிறைவேற்றுவோம். இறையருளை நிறைவாய் பெறுவோம்.  – Fr. Maria Antony, Palayamkottai. 2016.

இனி எல்லாம் சுகமே!
மெட்ரோ கதவு

‘அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது’ (லூக்கா 2:24)

இன்று காலை கல்லூரிக்குச் செல்ல மெட்ரோ ஏறினேன்.

மெட்ரோ கதவு மூடியும் மெட்ரோ நகராமல் சில மணித்துளிகள் நின்றுகொண்டிருந்தது.

 

மெட்ரோவுக்கு வெளியே ப்ளாட்ஃபார்மில் டியூட்டியில் இருந்த ஒரு பெண் ஆர்மி இளவல் இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தாள். உயரம் எப்படியும் ஆறடி இரண்டு அங்குலம் இருக்கும். நல்ல முகத் தோற்றம். செந்நிற முடி. அதன் மேல் ஒரு தொப்பி. கையில் நீண்ட துப்பாக்கி. வலது தொடையில் தொங்கிக் கொண்டிருந்த மற்றொரு கைத்துப்பாக்கி. காதில் வயர்லெஸ் குச்சி. நடந்து கொண்டே இருந்தவள் சட்டென மெட்ரோ நோக்கி திரும்பினாள். மெட்ரோவின் கண்ணாடி ஜன்னலில் தன் முகம் பார்த்துக் கொண்டே கலைந்திருந்த இரண்டு முடிகளை  அப்படியே மேல்நோக்கி கோதிவிட்டு சரி செய்தாள்.

நிற்க.

மற்றவர் பார்க்குமாறு நாம் இருப்பதற்கு ரொம்பவே ஆசைப்படுகிறோம். இல்லையா?

நாளை ஆண்டவர் இயேசு எருசலேம் ஆலயத்தில் அர்ப்பணிக்கப்பட்ட திருநாளைக் கொண்டாடுகிறோம்.

உலகத்தையே மீட்க வந்த தங்கள் மகனைக் கைகளில் ஏந்திய இளம் தம்பதியினர் யோசேப்பு-மரியா, இரு மாடப்புறாக்களை மறு கையில் ஏந்தி நிற்கின்றனர்.

அலட்டிக்கொள்ளாத அர்ப்பணம் இதுதான்.

இன்று காலையிலிருந்து என் மனம் என் தேவ அழைத்தல் முகாம் நாட்களை யோசித்துக்கொண்டிருந்தது.

ஒரு மே மாதம். நானும் என் அம்மாவும் ராஜபாளையத்திலிருந்து புறப்பட்டு மதுரை ஞானஒளிவுபுரம் வருகிறோம். மதுரைக்கு வருவது அதுதான் முதல்முறை. முகவரி கண்டுபிடித்து பிரிட்டோ பள்ளிக்கு வந்து சேர்ந்தோம். ஏறக்குறைய 40 பேர் முகாமிற்கு வந்திருந்தார்கள். எட்டாம் வகுப்பு முடித்திருந்தேன். கலர் ஆடைகளைக் களை எடுத்து, ‘அணியலாம்’ என்று சொன்ன நான்கு ஆடைகளை மடித்து வைத்து, ஒரு தட்டு, டம்ளர் என வந்திருந்தேன். எல்லாமே புதியதாக இருந்தது. அன்றிரவு நாங்கள் தங்கியிருந்த ஹாஸ்டல் மாடியில் ஏறி விளையாடிக்கொண்டிருந்தோம். சுற்றிலும் லைட் வெளிச்சம். ‘மதுரை இவ்ளோ பெரிசா!’ என்று வாய்பிளந்து நின்றேன். அருட்திரு. ஏஞ்சல்தான் இறையழைத்தல் ஊக்குநர். அவருக்கு உதவியாக அன்று அருட்சகோதரராக இருந்த மரிய லூயிஸ் இருந்தார். அந்த முதல் இரவில் நான் தூங்கவே இல்லை.

முதல் அமர்வில் எல்லாரும் வட்டமாக அமர்ந்து ஒருவர் மற்றவரை அறிமுகப்படுத்தினோம். நிறைய ஊர்களின் பெயரை அன்றுதான் கேள்விப்பட்டேன். எனக்குத் தெரிந்த ஒரே ஊர் சுந்தரநாட்சியாபுரம். அங்கிருந்து பிரின்ஸ், மலையப்பன், இஞ்ஞாசி ஆகியோர் வந்திருந்தனர். என் முதல் தோழன் திருத்துவராஜ்.

யாரை எப்படிக் கூப்பிட வேண்டும், எப்படி பாட வேண்டும், எப்படி பேச வேண்டும் – எதுவுமே தெரியாது.

நிறைய போட்டிகள் வைத்தார்கள்.

‘மறைமாவட்டம்,’ ‘திருத்தந்தை’ என பெரிய பெரிய கேள்விகள் எல்லாம் கேட்டார்கள்.

விருதுநகரா இருக்குமோ என்று பார்த்தால், விருதுநகர் மாவட்டமாம்.

பங்குத்தந்தையாக இருக்குமோ என்று பக்கத்தில் எட்டிப் பார்த்தால் அந்த மாணவன் ‘போப்’ என எழுதியிருந்தான். நானும் கொஞ்சம் இனிசியல் போட்டு, ஜி.யு. போப் என எழுதி வைத்தேன்.

கடைசி நாள்.

ஏறக்குறைய யார் செலக்ட், யார் இல்லை என்பது தெரிந்துவிட்டது.

‘வீட்டுக்கு ஒரே பையனை நாங்கள் எடுக்கமாட்டோம்!’ என்றார் அருட்தந்தை.

முதல் சுற்றிலேயே நான் வெளியேற்றப்பட்டேன்.

வீட்டிற்கு வந்து 15 நாட்கள் கழித்து, நான் தேர்வு செய்யப்பட்டதாக கடிதம் வந்தது. ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. அந்த மஞ்சள் கலர் கார்டு இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. அதை எடுத்துக்கொண்டு தீப்பெட்டி ஆபிசில் அட்டைப்பெட்டி ஒட்டிக்கொண்டிருந்த என் அம்மாவிடம் ஓடினேன்.

அவர்களுக்கும் மகிழ்ச்சி.

இரவு என் அப்பாவிடம் சொன்னோம்.

அவர் ஒன்றுமே சொல்லவில்லை.

‘இந்த வயசுல இவனுக்கு துறவறம்னா என்ன தெரியும்?’ என்று மட்டும் கோபித்துக்கொண்டார்.

சரி…போகட்டும்…ஆக வேண்டியதைப் பார்ப்போம் என்றார்.

பெட்டி, போர்வை, புதிய யூனிஃபார்ம் என விறுவிறுப்பானது நாட்கள்.

இந்த ஒருவருடமாக நாம் கொண்டாடிய அர்ப்பண ஆண்டின் இறுதிநாளாகிய இன்று நான் என் அருள்நிலை வாழ்வு அர்ப்பணத்தை ஒருநிமிடம் எண்ணிப்பார்க்கின்றேன்.

‘தான் போவது எங்கே என்று தெரியாமலேயே புறப்பட்டுப்போனார்’ – இப்படித்தான் ஆபிராகமைப் பற்றிச் சொல்கிறார் எபிரேயர் திருமடலின் ஆசிரியர்.

எளிமை, கன்னிமை, கீழ்ப்படிதல் என்ற பெரிய பெரிய வார்த்தைகளில் இன்று வார்த்தைப்பாடுகள் எடுத்தாலும், அருள்நிலை இனியவர் தன் அழைத்தலில் நிலைக்கவும், நல்ல முறையில் வாழவும் வேண்டுமென்றால், தான் தேவ அழைத்தல் முகாமிற்கு சென்ற அந்த முதல் நாளை நினைத்துப்பார்த்தாலே போதும் என நினைக்கிறேன்.

அன்று என்னிலிருந்த யாரையும் இம்ப்ரஸ் பண்ண நினைக்காத எளிய உள்ளம், எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம், எதையும் எதிர்நோக்காமல், எதிர்பார்க்காமல் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு இன்றும் என்னில் இருக்க வேண்டும் என்பதே என் செபமாக இருக்கிறது.

 

சிந்தனை

அறிமுகமான கடவுளை அறிவிப்பதே நமது பணி.

முதியவர்களாக இருந்த போதிலும் காத்திருந்து தங்களது கடமையை செய்வதைப் பார்க்கின்றோம்.

திருமுழுக்கு பெற்ற நாம் எல்லாரும் அறிவிக்க கடமைப் பெற்றிருக்கின்றோம். நம்முடைய கடமையை செய்து வருகின்றோமா?

அறிவிப்பு என்பது நன்கு அறிமுகமானால் மட்டுமே சாத்தியமானது.

இரு பெரியவர்களும் தங்களது வாழ்விலே கோவிலேயே தங்கி தங்களது நாட்களை கழித்து வந்தனர். மெசியாவுக்காக காத்திருந்தனர். நிறைய அறிந்திருந்ததால் அவர்கள் அறிவித்தார்கள்.

நாமும் அறிந்து தெரிந்து தெரிந்து கொள்வோம். அறிவிப்போம்.

இயேசுவை காணிக்கையாக அர்ப்பணித்தல்

எருசலேம் ஆலயத்தில் குழந்தை இயேசுவைப் பெற்றோர்கள் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறார்கள். இந்த அர்ப்பணத்தினால் தான் அவர்  பிற இனத்தாருக்கு மீட்பு அருளும் ஒளியாகவும் பிறந்த இனத்திற்கு பெருமையும் சேர்க்க முடிந்தது. இவருடைய அர்ப்பணமான செயல்கள் பலருக்கு எழுச்சியைக் கொடுக்கும் என்று முன்னறிவிக்கப்படுகிறது. அதனால்தான் இயேசு தம்மையே அனைவருடைய மீட்புக்காகக் கையளிக்கிறார். சிலுவைச் சாவை ஏற்றுக்கொள்கிறார். அனைவருடைய பாவங்களுக்குப் பலியாக வேறு எவற்றையும் பலி கொடுக்காமல் தம்மையே மாசற்றப் பலிப்பொருளாக ஒப்புக் கொடுக்கிறார்.

குருக்கள் காணிக்கையாக கடவுளுக்கு பல பலிகளைச் செலுத்தி வந்தனர். ஆனால் கடவுளுக்கு ஏற்புடைய பலி அவருக்கு உகந்த உள்ளமே. எனவே நாமும் பல பொருட்களைப் பலியாக ஒப்புக்கொடுப்பதைக் காட்டிலும் நம்மையே பலியாக ஒப்புக்கொடுப்பதே மேலானது. இறைவனுக்கும் ஏற்புடையதாகும்.

 

Posted in Uncategorized | Leave a comment

பிப்ரவரி 2

ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா

முதல் வாசகம்

நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார்.

இறைவாக்கினர் மலாக்கி நூலிலிருந்து வாசகம் 3: 1-4

கடவுளாகிய ஆண்டவர் கூறுவது: “இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார்; அப்பொழுது, நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ வருகிறார்” என்கிறார் படைகளின் ஆண்டவர்.

ஆனால் அவர் வரும் நாளைத் தாங்கக் கூடியவர் யார்? அவர் தோன்றும்போது நிற்க வல்லவர் யார்? அவர் புடமிடுகிறவரின் நெருப்பைப் போலும் சலவைத் தொழிலாளியின் சவர்க்காரத்தைப் போலும் இருப்பார். அவர் புடமிடுபவர் போலும் வெள்ளியைத் தூய்மைப்படுத்துபவர் போலும் அமர்ந்திருப்பார். லேவியின் புதல்வரைத் தூய்மையாக்கிப் பொன், வெள்ளியைப் போல் அவர்களைப் புடமிடுவார்.

அவர்களும் ஆண்டவருக்கு ஏற்புடைய காணிக்கை கொண்டு வருவார்கள். அப்பொழுது பண்டைக் காலத்தில் முன்னைய ஆண்டுகளில் இருந்தது போல் யூதாவின் காணிக்கையும் எருசலேமின் காணிக்கையும் ஆண்டவருக்கு உகந்தனவாய் இருக்கும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 24: 7. 8. 9. 10 (பல்லவி: 10b)

பல்லவி: படைகளின் ஆண்டவர் இவர்; இவரே மாட்சிமிகு மன்னர்.

7 வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்; மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். பல்லவி

8 மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? வலிமையும் ஆற்றலும் கொண்ட ஆண்டவர் இவர்; இவரே போரில் வல்லவரான ஆண்டவர். பல்லவி

9 வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்; மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். பல்லவி

10 மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? படைகளின் ஆண்டவர் இவர்; இவரே மாட்சிமிகு மன்னர். பல்லவி

இரண்டாம் வாசகம்

எல்லாவற்றிலும் தம் சகோதரர் சகோதரிகளைப் போல் ஆனார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 2: 14-18

சகோதரர் சகோதரிகளே, ஊனும் இரத்தமும் கொண்ட பிள்ளைகளைப் போல் கிறிஸ்துவும் அதே இயல்பில் பங்கு கொண்டார். இவ்வாறு சாவின்மேல் ஆற்றல் கொண்டிருந்த அலகையைச் சாவின் வழியாகவே அழித்துவிட்டார். வாழ்நாள் முழுவதும் சாவு பற்றிய அச்சத்தினால் அடிமைப்பட்டு இருந்தவர்களை விடுவித்தார். ஏனெனில் அவர் வானதூதருக்குத் துணை நிற்கவில்லை.

மாறாக, ஆபிரகாமின் வழிமரபினருக்கே துணை நின்றார் என்பது கண்கூடு. ஆதலின், கடவுள் பணியில் அவர் இரக்கமும், நம்பிக்கையும் உள்ள தலைமைக் குருவாயிருந்து, மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாகுமாறு எல்லாவற்றிலும் தம் சகோதரர் சகோதரிகளைப் போல் ஆகவேண்டியதாயிற்று. இவ்வாறு தாமே சோதனைக்கு உள்ளாகித் துன்பப்பட்டதனால் சோதிக்கப்படுவோருக்கு உதவி செய்ய அவர் வல்லவர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 2: 32 அல்லேலூயா, அல்லேலூயா! இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை. அல்லேலூயா.

 

நற்செய்தி வாசகம்

உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன.

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 22-40

மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது, குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள். ஏனெனில், “ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்” என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது. அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.

அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார். “ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை” என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார். அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார்.

திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்த போது, சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி, “ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர். ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை” என்றார்.

குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர். சிமியோன் அவர்களுக்கு ஆசி கூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, “இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” என்றார்.

ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர். மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்; அவருக்கு வயது எண்பத்து நான்கு.

அவர் கோவிலை விட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார். அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப் பற்றிப் பேசினார்.

ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்து முடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள். குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

அல்லது

குறுகிய வாசகம்

உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன.

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 22-32

மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது, குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள். ஏனெனில், “ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்” என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது. அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.

அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார். “ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை” என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார். அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்த போது, சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி, “ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர். ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை” என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

Posted in Uncategorized | Leave a comment

ஆண்டவருக்கு உன்னை அர்ப்பணி

ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல்

 

I         மலாக்கி 3: 1-4

II        எபிரேயர் 2: 14-18

III       லூக்கா 2: 22-40

 

ஆண்டவருக்கு உன்னை அர்ப்பணி

 

நிகழ்வு

 

          மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் உரோமையை ஆண்டுவந்தவன் கொன்ஸ்டான்டியுஸ் குளோரஸ். இவன் கி.பி 293 ஆம் ஆண்டு அரசனாகப் பதிவியேற்ற பொழுது, ஏராளமான கிறிஸ்தவர்கள் அரசவையிலும் அரண்மனையிலும் உயர்பதவிகளை வகிப்பதைக் கண்டான். அப்பொழுது இவனுக்குள் ஓர் எண்ணம் தோன்றியது. ‘கிறிஸ்தவர்களாக இருக்கின்ற இவர்கள் கிறிஸ்துவுக்கு உண்மையாக இருக்கின்றார்களா…? இதை நாம் சோதித்துப் பார்ப்போம்…!’ என்பதே அந்த எண்ணம். உடனே இவன் “கிறிஸ்துவுக்கு உண்மையாக இருக்க விரும்புகின்றவர்கள் தாங்கள் வகிக்கக்கூடிய பதவியை விட்டுவிடவேண்டும். பதவி வேண்டும் என்று நினைக்கின்றவர்கள் கிறிஸ்துவை மறுதலிக்கவேண்டும்” என்று ஆணை பிறப்பித்தான்.

 

இவன் விடுத்த ஆணையைத் தொடர்ந்து இவனுடைய அரசவையிலும் அரண்மனையிலும் உயர்பதவி வகித்த பல கிறிஸ்தவர்கள், “எங்களுக்குப்  பதவியை விட கிறிஸ்துவே முக்கியம்” என்று தாங்கள் வகித்து வந்த பதவியைத் துச்சமெனத் தூக்கியெறிந்தார்கள். ஒருசில கிறிஸ்தவர்களோ பதவிக்கு ஆசைப்பட்டு, கிறிஸ்தவை மறுதலித்தார்கள். இதையெல்லாம் பார்த்த கொன்ஸ்டான்டியுஸ் குளோரஸ், கிறிஸ்துவுக்காகத் தாங்கள் வகித்த பதவிகளையும் துச்சமெனத் தூக்கியெறிந்த கிறிஸ்தவர்களை எல்லாம் மீண்டுமாக அவர்கள் வகித்துவந்த பதவியிலேயே அமர்த்தினான். அதே நேரத்தில்  யாரெல்லாம் பதவிக்கு ஆசைப்பட்டுக் கிறிஸ்துவை மறுதலித்தார்களோ, அவர்களையெல்லாம் அவர்கள் வகித்து  வந்த பதவியிலிருந்து தூக்கி எறிந்தான். இதற்கு இவன் சொன்ன காரணம், “கிறிஸ்துவுக்கு உண்மையாக இருப்பவர்கள் தாங்கள் வகிக்கின்ற பதவிக்கும் உண்மையாக இருப்பார்கள்” என்பதாகும்.

 

ஆம், திருமுழுக்கு பெற்ற ஒவ்வொரு கிறிஸ்தவரும் அவருக்கு உண்மையுள்ளவராக, உகந்தவராக இருக்கவேண்டும். அதைதான் மேலே உள்ள நிகழ்வும் இன்று நாம் கொண்டாடகின்ற விழாவும் நமக்கு எடுத்துக்கூறுகின்றன. இன்று நாம் ஆண்டவர் இயேசு கோயிலில் ஒப்புக்கொடுக்கப்பட்ட விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட இயேசு எப்படி ஆண்டவருக்கு உகந்தவராக வாழ்ந்துவந்தார்…? நாம் எப்படி ஆண்டவருக்கு உகந்தவர்களாக வாழ்வது…? ஆகியவற்றைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

 

நாம் ஆண்டவருக்கு உரியவர்கள்

 

           இன்றைய நற்செய்தியில், தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபொழுது (நாற்பதாவது நாளில்) குழந்தை இயேசுவை, தாய் மரியாவும் யோசேப்பும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்க எருசலேம் திருக்கோயிலுக்குச் சென்றார்கள் என்று வாசிக்கின்றோம். குழந்தையை ஏன் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கவேண்டும் என்ற கேள்வி எழலாம். இதற்கான பதிலை நாம் விடுதலைப் பயண நூலில் (விப 13: 2,12,15) வாசித்தறியலாம்.

 

மோசேயின் தலைமையில் இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டை விட்டுப் போக முற்பட்டபொழுது, பார்வோன் மனமிறுகி இஸ்ரயேல் மக்களைப் போகவிடாமல் தடுத்தான். இதைத் தொடர்ந்து எகிப்து நாட்டிலுள்ள மனிதருள் தலைப்பேறு தொடங்கி கால்நடைகள் தலையீற்று ஈறாக ஆண்பிறப்பு அனைத்தையும் ஆண்டவர் சாகடித்தார். அதே வேளையில் வீடுகளில் இரத்தம் தெளிக்கப்பட்ட இஸ்ரயேலரின் வீடுகளின் இருந்த ஆண் தலைபேற்றை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டார். இதனலாயே ஆண்தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்ற நிலை உருவானது. குழந்தை இயேசுவின் தாய் மரியாவும் யோசேப்பும் திருச்சட்டத்தில் கூறப்பட்டவாறே குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கின்றார்கள். இவ்வாறு அர்ப்பணிக்கின்றபொழுது, இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளைப் பலியாக ஒப்புக்கொடுக்கின்றார்கள்.

 

மரியாவும் யோசேப்பும் குழந்தை இயேசுவைக் கோவிலில் ஆண்டவருக்கு அர்ப்பணித்தது, நமக்கு இரண்டு உண்மைகளை உணர்த்துகின்றது. ஒன்று, அவர்கள் ஆண்டவரின் திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து நடந்தார்கள் என்பதாகும். இரண்டு, ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இயேசு எவ்வாறு ஆண்டவருக்கு உரியவர் ஆனாரோ, அதுபோன்று திருமுழுக்குப் பெற்ற அல்லது கிறிஸ்தவர்களாக இருக்கின்ற நாம் ஒவ்வொருவரும் ஆண்டவருக்கு உரியவர்களாக இருக்கவேண்டும். இதை நாம் மறந்துவிடக்கூடாது

 

கடவுளுக்கு உகந்தவராய் இருந்த இயேசு

 

          ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இயேசு, வளர்ந்து வலிமை பெற்று, ஞானத்தால் நிறைந்து, ஆண்டவருக்கு உகந்தவராய் இருந்தார் என்று இன்றைய நற்செய்தியின் இறுதியில் வாசிக்கின்றோம். இயேசு எப்படி ஆண்டவருக்கு உகந்தவராய் இருந்தார் என்பது குறித்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

 

இயேசு ஆண்டவருக்கு உகந்தவராய் இருந்தார் என்பதை அவர் ஆண்டவரின் திருவுளத்தின்படி நடந்தார் என்று எடுத்துக்கொள்ளலாம். தன்னுடைய பன்னிரண்டு வயதிலேயே, “நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்கவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்று சொன்ன இயேசு, தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தந்தை தன்னிடம் ஒப்படைத்த அலுவல்களையே செய்துகொண்டிருந்தார் (யோவா 17:4)  அல்லது தந்தையின் திருவுளத்தின்படியே நடந்தார்.. இன்னும் சொல்லப்போனால், இயேசு தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதையே தன்னுடைய உணவாகக் கொண்டிருந்தார் (யோவா 4:34).

 

அப்படியானால், இயேசுவைப் போன்று கடவுளுக்கு உரியவர்களாகிய நாம், கடவுளுக்கு உகந்தவற்றை அல்லது கடவுளின் திருவுளத்தின்படி நடக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் நம்முடைய விருப்பு வெறுப்புகளுக்கு முதன்மையான இடம் கொடுத்து, இறைவனின் விருப்பத்தையும் அவருடைய திருவுளத்தையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். ஆண்டவரைக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழாவினைக் கொண்டாடும் நாம், ஆண்டவரின் திருவுளத்தை  நிறைவேற்றி வாழ்வோம் என்னும் உறுதி ஏற்போம்.

         

பிற இனத்தாருக்கு ஒளியாகவும் இஸ்ரயேலுக்கு பெருமையாகவும் விளங்கிய இயேசு

 

          ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்டு, ஆண்டவருக்கு உகந்தவராய் இருந்த, ஆண்டவரின் திருவுளத்தின்படி நடந்த இயேசுவின் வாழ்வு எப்படி இருந்தது என்பதையும் நாம் தெரிந்துகொள்ளவேண்டும். இதற்கான பதிலை நாம் எருசலேம் திருக்கோவிலில் இருந்த சிமியோன் இறைவாக்காக உரைக்கின்ற வார்த்தைகளில் கண்டுகொள்ளலாம். இயேசு இஸ்ரயேலின் பெருமையாகவும் புறவினத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளியாக இருப்பார் என்று அவர் கூறுகின்றார். இயேசுவின் பணிவாழ்வைப் பார்க்கின்றபொழுது, யூதர்களுக்கு மட்டுமல்லாது எல்லாருக்குமாக தான் செய்த பணியின் வழியாக அவர் ஒளியாக இருந்தார். அதனால்தான் எவ்வளவோ அவர் “நானே உலகின் ஒளி” (யோவா 8:12) என்று கூறுகின்றார்.

 

ஆண்டவருக்கு உரியவர்களாகிய நாம்… ஆண்டவரின் திருவுளத்தின்படி வாழ அழைக்கப்பட்டிருக்கின்ற நாம் நம்முடைய சொல்லாலும் செயலாலும் எல்லா மக்களுக்கும் – உலகிற்கே ஒளியாக இருக்கவேண்டும். இதில் மாற்றுக்கருத்து இல்லை.

 

சிந்தனை  

 

          ‘இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்’ (கலா 2: 20) என்பார் புனித பவுல். இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றி வாழ்ந்து வந்த புனித பவுல் கிறிஸ்துவே என்னுள் வாழ்கின்றார் என்ற உணர்வோடு வாழ்ந்தார். கடவுளுக்கு உரியவர்களாகிய வாழ அழைக்கப்பட்டிருக்கும் நாம், கிறிஸ்துவே நம்முள் வாழ்கின்றார் என்ற உணர்வோடு இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றி வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

 

–          மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

Posted in Uncategorized | Leave a comment

மாற்கு 4: 35-41

பொதுக்காலம் மூன்றாம் வாரம்

சனிக்கிழமை

மாற்கு 4: 35-41

 

ஏன் அஞ்சுகிறீர்கள்?

 

நிகழ்வு

 

பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த மிகப்பெரிய கவிஞர் வில்லியம் காப்பர். இவருக்கு முப்பத்து இரண்டு வயது நடந்துகொண்டிருக்கும்போது, தன்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்தார். இதனால் இவர் தற்கொலை செய்து இறந்துபோய்விடலாம் என்ற முடிவுக்கு செய்தார். இதன் பொருட்டு இவர் நஞ்சுண்டு இறக்க முயற்சி செய்தார். அம்முயற்சி தோல்வியில் முடியவே தேம்ஸ் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து இறக்க முயற்சி செய்தார். இதுவும் தோல்வியில் முடிந்தது.

 

இதற்குப் பின்பு இவர் கத்தியில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தார். இவர் கத்தியில் விழ முயற்சித்தபொழுது, இவருடைய எடை தாங்காமல் கத்தி முறிந்துபோனது. பின்னர் தூக்கிப் போட்டு இறக்க முயற்சி செய்தார். இதுவும் தோல்வியில் முடிந்ததால், வாழ்க்கையை வெறுத்துப் போனார். இந்நிலையில் இவர் ஒருநாள் திருவிவிலியத்தை எடுத்து வாசிக்கையில், புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் இடம்பெற்றிருந்த வார்த்தைகள் இவருடைய  உள்ளத்தில் நம்பிக்கையையும் துணிவையும் ஊட்டன. இதற்குப் பின்பு இவர் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தை அடியோடு விட்டுவிட்டு, கடவுள் தனக்குக் கொடுத்த திறமைகளைக் கொண்டு, கவிதைகளைப் புனையவும் கிறிஸ்தவப் பக்திப் பாடல்களை இயற்றவும் தொடங்கினார்.

 

தற்கொலை செய்துகொண்டு வாழ்க்கையையே முடித்துக் கொள்ளலாம் என்று நினைத்த வில்லியம் காப்பருக்கு ஆண்டவருடைய வார்த்தை நம்பிக்கையையும் துணிவையும் ஊட்டின. அதுபோன்று இன்றைய நற்செய்தி வாசகத்தில், கடலில் ஏற்பட்ட பெரும் புயலைக் கண்டு அஞ்சி நடுங்கிய சீடர்களுக்கு இயேசுவின் வார்த்தைகள் ஆறுதல் அளிப்பவையாக இருக்கின்றன. இது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

 

புயற்காற்றை அடக்கிய இயேசு

 

நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களோடு கடலில் பயணம் செய்கின்றபோது வீசுகின்ற புயற்காற்றை அடக்குவதைக் குறித்து வாசிக்கின்றோம். இயேசு செய்த இந்த வல்ல செயல் நமக்கு உண்மைகளை எடுத்து எடுத்துக்கூறுகிறது. ஒன்று, இயேசு இறைமகன். இரண்டு, அவர் நம்மோடு இருந்து நமக்கு நம்பிக்கையூட்டுகின்றார். இந்த இரண்டையும் குறித்து சற்று விரிவாக சிந்தித்துப் பார்ப்பாம்.

 

திருப்பாடல் 107:29 இல் இவ்வாறு வாசிக்கின்றோம்: “புயல்காற்றை அவர் பூந்தென்றலாக மாற்றினார்;. கடல் அலைகளும் ஓய்ந்துவிட்டன.” அதைப்போன்று திருப்பாடல் 65:7 இல் இவ்வாறு வாசிக்கின்றோம்: “கடல்களின் இரைச்சலையும் அவற்றின் அலைகளின் ஓசையையும் மக்களினங்களின் அமளியையும் அடக்குகின்றீர்.” இந்த இரண்டு இறைவார்த்தைப் பகுதிகளும் ஆண்டவராகிய கடவுளுக்கு எல்லாமும் கட்டுப்படும் என்ற உண்மையை எடுத்துரைக்கின்றன. இயேசு கடலில் ஏற்பட்ட புயல் காற்றை “இரையாதே, அமைதியாய் இரு” என்ற வார்த்தைகளைச் சொல்லி அடக்குவதன் மூலம் அவர் ஆண்டவர், இறைமகன் என் உண்மையை மாற்கு நற்செய்தியாளர் எடுத்துக் கூறுகின்றார்.

 

நம்மோடு இருந்து, நம்பிக்கையூட்டும் இயேசு

 

இயேசு கிறிஸ்து சாதாரணமான ஒருவர் அல்லர்; அவர் இறைமகன் என்று எடுத்துக் கூறிய மாற்கு நற்செய்தியாளர், அவர் நம்மோடு இருந்து, நமக்கு நம்பிக்கையூட்டுகின்றார் என்ற உண்மையையும் எடுத்துக் கூறுகிறார். அது எவ்வாறு என்று பார்ப்போம்.

 

இன்றைய நற்செய்திப் பகுதியை, கிறிஸ்தவம் வேகமாகப் பரவி வந்த தொடக்கக் காலத் திருஅவையோடு ஒப்பிடலாம். தொடக்கக் காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஏராளமான வன்முறைகளும் அடக்குமுறைகளும் நடைபெற்றன. இவற்றிற்கு அஞ்சி ஒருசிலர் கிறிஸ்துவை மறுதலிக்கத் தொடங்கினார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் இயேசு கூறுகின்ற, “ஏன் அஞ்சுகிறீர்கள். உங்களுக்கு இன்னும் நம்பிக்கையில்லையா?” என்ற வார்த்தைகள் இருக்கின்றன. இயேசுவின் இவ்வார்த்தைகள் இயேசுவின் சீடர்களுக்கும் தொடக்கக்கால கிறிஸ்தவர்களுக்கும் மட்டுமல்லாது, நமக்கும் நம்பிக்கையளிக்கக் கூடியவையாக இருக்கின்றன்.

 

ஆம். வாழ்க்கை என்ற கடலில் பயணிக்கின்றபோது எதிர்வரும் சவால்கள், குழப்பங்கள், துன்பங்கள் ஆகியவற்றால நம்முடைய வாழ்க்கையே முடிந்துபோய்விட்டதென நினைத்து அஞ்சி வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இறைவன் நம் அருகில் இருந்து நம்மைத் தேற்றியும் திடப்படுத்திக்கொண்டும் இருக்கின்றார். எனவே நாம் இறைவனின் உடனிருப்பிலும் அவருடைய பராமரிப்பிலும் முழுமையான நம்பிக்கை வைத்து, நம்முடைய வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேறுவதே சிறந்தது.

 

சிந்தனை

 

‘அஞ்சாதே, ஏனெனில் நான் உன்னோடு இருக்கிறேன்’ (எசா 43:5) என்பார் ஆண்டவர். ஆகையால், நாம் இறைவனின் உடனிருப்பிலும் பாதுகாப்பிலும் நம்பிக்கை வைத்து, நம்பிக்கையோடு நம் வாழ்க்கையை எதிர்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

 

–          மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

Posted in Uncategorized | Leave a comment

2 சாமுவேல் 12: 1-7a, 10b-17

பொதுக்காலம் மூன்றாம் வாரம்

சனிக்கிழமை

2 சாமுவேல் 12: 1-7a, 10b-17

 

“நீயே அம்மனிதன்”

 

நிகழ்வு

 

          ஒருநாள் மாவீரன் அலெக்சாண்டரிடம், படைவீரன் ஒருவன் மிகப்பெரிய தவறு  செய்துவிட்டதாக புகார் ஒன்று வந்தது. அவர் அதை விசாரித்துப் பார்த்தபொழுது அது உண்மையெனவும் தெரிந்தது.

 

உடனே அவர் குறிப்பிட்ட அந்தப் படைவீரனை அழைத்து விசாரணை நடத்தத் தொடங்கினார். “உன்மீது சுமத்தப்பட்டிருக்கின்ற இந்தக் குற்றச்சாட்டை ஒத்துக்கொள்கின்றாயா…?” என்றார் அலெக்சாண்டர். “ஆம். நான்தான் இந்தக் குற்றத்தைச் செய்தேன் என்று ஏற்றுக்கொள்கின்றேன்” என்றான் படைவீரன். சிறிதுநேரம் அமைதியாக இருந்த அலெக்சாண்டர் மீண்டுமாக அவனிடம், “உன்னுடைய பெயர் என்ன?” என்றார். “அலெக்சாண்டர்” என்று அந்தப் படைவீரன் சொன்னதும், ஒரு வினாடி ஆடிப் போய்விட்டார் அலெக்சாண்டர்.

 

பின்னர் அவர் அந்தப் படைவீரனிடம், “ஒன்று, ‘அலெக்சாண்டர்’ என்ற உன்னுடைய பெயரை மாற்றி வேறொரு பெயர் வை. இல்லையென்றால் இதுபோன்ற தவற்றினைச் செய்யாதே! அலெக்சாண்டர் என்ற பெயரை வைத்துக்கொண்டு இப்படித் தவறு செய்வது எனக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றது” என்று சொல்லி அவனை எச்சரித்து அனுப்பி வைத்தார்.

 

இந்த நிகழ்வில் வருகின்ற படைவீரனைப் போன்று நாமும் கிறிஸ்தவன்/கிறிஸ்தவள் என்ற பெயருக்கு ஏற்ப வாழாமல், பாவத்தில் உழன்றுகொண்டிருக்கின்றோம். இன்றைய முதல் வாசகத்தில், பெற்றுக்கொண்ட அழைப்பிற்கு ஏற்ப வாழாமல், பாவம் செய்த தாவீது அரசரைக் குறித்து வாசிக்கின்றோம். தாவீது செய்த தவறு என்ன? அவர் எப்படித் தன்னுடைய தவற்றை உணர்ந்து மனம்வருந்தினார்? ஆகியவற்றைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

 

தாவீதின் தவற்றைச் சுட்டக்காட்டிய நாத்தான்

 

          தாவீது அரசர் உரியாவின் மனைவியான பத்சேபாவோடு தவறு செய்கின்றார். அந்தத் தவற்றினைச் செய்த பிறகு அவர் ஆறு மாதங்கள் எதுவுமே நடக்காது போல் காட்டிக்கொள்கின்றார் அல்லது அந்த தவற்றினை மறைப்பதற்கு முயற்சி செய்கின்றார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாத்தான் இறைவாக்கினர் அவரிடம் வந்து, மிகவும் நேர்த்தியாகப் பேசி, அவர் செய்த தவற்றினை அவரிடம் சுட்டிக்காட்டி, அவருடைய குற்றத்தை உணர வைக்கின்றார்.

 

நாத்தான் இறைவாக்கினர் ஏற்கெனவே, தாவீது அரசர் ஆண்டவருக்காகக் கோயில் கட்ட நினைத்தபொழுது, ஆண்டவரின் விருப்பத்தை அவரிடம் எடுத்துச் சொல்வார் (2 சாமு 7). இப்பொழுது அவர் தாவீது உரியாவின் மனைவியோடு தவறு செய்தபொழுது, அந்த தவற்றினை  மிகவும் நேர்த்தியாக அவரிடம் எடுத்துக்கூறுகின்றார். நாத்தான் இறைவாக்கினர் தாவீது செய்த தவற்றினை அவரிடம் சுட்டிக்காட்டிவதற்குப் பயன்படுத்துகின்ற செல்வந்தர், ஏழை, அந்த ஏழையிடம் இருந்த ஆட்டுக்குட்டி பற்றிய உவமைக் கதை மிகவும் கவனிக்கத்தக்கது. ஒரு காலத்தில் தாவீது ஆடுமேய்த்துக்கொண்டிருந்தவர் என்பதால், அவருடைய தவற்றினைச் சுட்டிக்காட்டுவதற்கு நாத்தான் இறைவாக்கினர் ஓர் ஆட்டினை உருவகமாகப் பயன்படுத்துகின்றார். நாத்தான் இறைவாக்கினர் தாவீது அரசரிடம் உவமைக் கதையைச் சொல்லி முடித்ததும், “இதைச் செய்தவன் கட்டாயம் சாகவேண்டும்…” என்கின்றார் தாவீது அரசர். உடனே நாத்தான் இறைவாக்கினர், “நீயே அம்மனிதன்…” என்கின்றார்.

 

தொடர்ந்து அவர் தாவீது அரசரிடம், அவருக்கு நேரப்போகிற கேடுகளையும் எடுத்துச் சொல்கின்றார். நாத்தான் இறைவாக்கினர் தாவீது அரசருக்கு நான்குவிதமான கேடுகள் நேரப்போவதாகச் சொல்கின்றார். ஒன்று, அவருக்கும் பத்சேபாவிற்கும் பிறந்த குழந்தை இறக்கும். இரண்டு, அவருடைய மகன்களான அம்னோன், அப்சலோம்… ஆகியோர் கொல்லப்படுவர். மூன்று, அவருடைய மகள் ‘சூறையாடப்படுவாள்’. நான்கு, அவருடைய வைப்பாட்டிகளும் ‘சூறையாடப்படுவார்கள்’. இதை நாத்தான் இறைவாக்கினர் தாவீதிடம்  சொல்லி முடித்ததும், அவர் அதற்கு எப்படி எதிர்வினை ஆற்றினார் என்பதைத் தொடர்ந்து நாம் சிதித்துப் பார்ப்போம்.

 

 

 

தவற்றுக்காக மனம்வருந்திய தாவீது

 

          நாத்தான் இறைவாக்கினர் தாவீது அரசரிடம் அவர் செய்த தவற்றினைச் சுட்டிக்காட்டியதும், தாவீது “நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டேன்” என்று மனம்வருந்தி அழுகின்றார். உடனே நாத்தான் இறைவாக்கினர் அவரிடம், “ஆண்டவரும் உனது பாவத்தை நீக்கிவிட்டார். நீ சாகமாட்டாய்” என்கின்றார்.

 

புனித யோவான் தன்னுடைய முதல் திருமுகத்தில் இவ்வாறு கூறுவார்: “நம் பாவங்களை நாம் ஒப்புக்கொள்வோமென்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து, குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துவார்.” (1 யோவா 1: 9). தாவீது அரசர் தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டதும், ஆண்டவர் அவரை மன்னிக்கின்றார். அப்படியானால், நாம் கடவுளுக்கு எதிராகவும் சக மனிதர்களுக்கு எதிராகவும் செய்த குற்றங்களை ஒப்புக்கொள்கின்றபொழுது, கடவுள் நம்முடைய பாவங்களை மன்னித்து நமக்குப் புது வாழ்வு தருவார் என்பது உறுதி.

 

சிந்தனை

 

          ‘நொறுங்கிய, குற்றமுணர்ந்த உள்ளத்தை இறைவன் அவமதிப்பதில்லை’ (திபா 51: 17) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், மனிதர்களாகிய நாம் தவறு செய்யலாம். அப்படித் தவறு செய்கின்றபொழுது, அதை ஒத்துக்கொண்டு இறைவனின் மன்னிப்புக் கேட்டுத் திருந்தி நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

–          மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

Posted in Uncategorized | Leave a comment

திருப்பலி முன்னுரை

பொதுக்காலம் 03ஆம் ஞாயிறு 26 01 2020

திருப்பலி முன்னுரை

காரிருளில் நடந்து வந்த மக்களை பேரொளியில் வழிநடத்திய இறைவனின் நற்செய்தியை நம்பிக்கையோடு அறிக்கையிட பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு நம்மை அழைக்கின்றது.

எசாயா இறைவாக்கினரால் இயேசுவின் பணி முன்னறிவிக்கப்படுகிறது. பாதையை செம்மையாக்குங்கள் என யோவானால் மீண்டும் அறிவிக்கப்படுகிறது. விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது என்று இன்றும் அறிவிக்கப்படுகிறது. மனதின் குறையைக் களைந்து, இறைப் பாதையை அறிந்து, நற்செய்தியை நமது வாழ்வாக்குவோம்.

இன்றைய முதல் வாசகத்தில் சுமையாக இருந்த நுகத்தை உடைத்தெறிந்தீர் என்று ஆசீர்வாதமான வார்த்தைகளை வழங்குகிறார் எசாயா இறைவாக்கினர்.

காரிருள் ஒளி பெற்றது கதிரவனால்
மன இருள் மகிழ் பெற்றது மனுமகனால்
துன்பங்களுக்கு துணிவில்லை
தூயவரின் மக்களை நோக்க

எனவே இறைவன் வழங்கும் அக்களிப்பை அணிந்து ஆனந்தம் கொள்வோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், “என் பின்னே வாருங்கள், உங்களை மனிதர்களைப் பிடிப்பவர் ஆக்குவேன்” என்று இறை பணிக்கு சீடர்களை அழைக்கிறார் இயேசு. இவ்வுலகத்தில் சாதாரண மனிதன் போன்ற வாழ்வே வாழ்ந்தார். ஆனால் தேவ மைந்தனுக்குரிய வல்லமையைக் கொண்டு, அற்புதங்களை நிகழ்த்தினார். மக்களை மீட்க இன்றும் பல சீடர்களை அழைக்கிறார்.

உழைப்பை விடவும் உடைமையை விடவும் உன்னதமான பணி நற்செய்திப் பணி என சீடர்களை அழைக்கிறார். நாமும் அதுபோல வாழவும், நமது வாழ்வே பிறர் விரும்பும் நற்செய்தியாக அமைய வரம் வேண்டி, அன்பின் தேவனிடம் இறைஞ்சுவோம். இப்பலியில் இணைவோம்.

இறைமக்களின் மன்றாட்டுகள்

1. என் பின்னே வாருங்கள் என்றவரே எம் இறைவா!
எம் தாயாம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள் மனிதர்களை அன்பால் பிடிக்கவும், வாழ்க்கை செய்ல்களில் இயேசுவை பிரதிபலிக்கவும், திருப்பணிக்கான வல்லமையை தந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

2. காரிருள் மறைந்து ஒளியால் நிரப்புபவரே எம் இறைவா!
எம் பாரத நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள், காரிருள் சூழ்ந்திருக்கும் நாட்டை ஒளியால் நிரப்ப தேவையான நல்ல செயல் திட்டங்களையும், ஆக்கப் பூர்வமான செயல்களையும் செய்து, பொருளாதாரம், அமைதியில் நாட்டை மேம்படுத்த ஞானம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

3. நுகத்தை உடைத்தெறிபவரே எம் இறைவா!
குடும்பம், உறவு நாட்டில் நிகழ்த்தப்படும் அடக்குமுறைகள் ஒழியவும், அனைவரும் ஒருமனப்பட்டு ஆழவும், வேலைவாய்ப்பு இல்லாமல் தவிப்பவர்கள், வாழ்வாதாரத்தைப் பயன்படுத்தி முன்னேறவும், இறையாட்சிப் பணியில் ஈடுபட இளைஞர்கள் ஆர்வமாகச் செயல்படவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

4. மகிழ்ச்சியை மிகுதியாக்குபவரே எம் இறைவா!
எம் பகுதியில் போதிய இயற்கை கால சூழ்நிலையைத் தந்து, விவசாயம் சிறக்கவும், பொருளாதாரம் மேம்படவும், குடும்பங்களில் அமைதி, மகிழ்ச்சி பெருகவும், மக்கள் இறை பாதையை உணரவும், படிக்கும் மாணவர்கள் ஞானத்தோடு செயலாற்றவும், வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தை வரம் போன்ற எதிர்பார்ப்புகள் நிறைவேறவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

நன்றி: திருமதி ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.

“GOD IS LOVE”
Rev. Fr. Amirtha Raja Sundar J,

Posted in Uncategorized | Leave a comment

ஆண்டவரின் திருமுழுக்கு

ஆண்டவரின் திருமுழுக்கு

 

முதல் ஆண்டு

முதல் வாசகம்

இதோ! என் ஊழியர்! அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 42: 1-4,6-7

ஆண்டவர் கூறுவது: இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்; நான் தேர்ந்துகொண்டவர் அவர்; அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது; அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்; அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார். அவர் கூக்குரலிடமாட்டார்; தம் குரலை உயர்த்தமாட்டார்; தம் குரலொலியைத் தெருவில் எழுப்பவுமாட்டார். நெரிந்த நாணலை முறியார்; மங்கி எரியும் திரியை அணையார்; உண்மையாகவே நீதியை நிலைநாட்டுவார். உலகில் நீதியை நிலைநாட்டும்வரை அவர் சோர்வடையார்; மனம் தளரமாட்டார்; அவரது நீதிநெறிக்காகத் தீவு நாட்டினர் காத்திருப்பர்.

ஆண்டவராகிய நான் நீதியை நிலைநாட்டுமாறு உம்மை அழைத்தேன்; உம் கையைப் பற்றிப்பிடித்து, உம்மைப் பாதுகாப்பேன்; மக்களுக்கு உடன்படிக்கையாகவும் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் நீர் இருக்குமாறு செய்வேன். பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும், கைதிகளின் தளைகளை அறுக்கவும், இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்கவும் உம்மை அழைத்தேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

பதிலுரைப் பாடல்

திபா 29: 1ய,2. 3யஉ-4. 9b-10 (பல்லவி: 11b)

பல்லவி: ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதி அளித்து ஆசி வழங்குவாராக!

1ய இறைவனின் மைந்தரே! மாட்சியையும் வலிமையையும் ஆண்டவருக்கு உரித்தாக்குங்கள். 2 ஆண்டவரின் பெயருக்கேற்ற மாட்சியை அவருக்கு உரித்தாக்குங்கள்; தூய மாட்சி இலங்கும் ஆண்டவரை வழிபடுங்கள். பல்லவி

3யஉ ஆண்டவரின் குரல் கடல்மேல் ஒலிக்கின்றது; ஆண்டவர் நீர்த்திரள்களின்மேல் வீற்றிருக்கின்றார். 4 ஆண்டவர் குரல் வலிமைமிக்கது; ஆண்டவரின் குரல் மாட்சிமிக்கது. பல்லவி

9b ஆண்டவரின் குரல் காடுகளை வெறுமையாக்குகின்றது; அவரது கோவிலில் உள்ள அனைவரும் `இறைவனுக்கு மாட்சி’ என்று ஆர்ப்பரிக்கின்றனர். 10 ஆண்டவர் வெள்ளப் பெருக்கின்மீது வீற்றிருக்கின்றார்; ஆண்டவர் என்றென்றும் அரசராக வீற்றிருக்கின்றார். பல்லவி

 

இரண்டாம் வாசகம்

கடவுள் இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 10: 34-38

கொர்னேலியு மற்றும் அவரது வீட்டாரை நோக்கிப் பேதுரு கூறியது: “கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன். எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து, நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர்.

இயேசு கிறிஸ்து வாயிலாக அமைதி உண்டு என்னும் நற்செய்தியை அவர் இஸ்ரயேல் மக்களுக்கு அனுப்பினார். அவரே அனைவருக்கும் ஆண்டவர். திருமுழுக்குப் பெறுங்கள் என்று யோவான் பறைசாற்றிய பின்பு கலிலேயா முதல் யூதேயா முழுவதிலும் நடந்தது உங்களுக்குத் தெரியும்.

கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்ததால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற் 9: 7

அல்லேலூயா, அல்லேலூயா! வானம் திறந்தது; தந்தையின் குரலொலி கேட்டது: “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்” அல்லேலூயா.

 

நற்செய்தி வாசகம்

திருமுழுக்குப் பெற்ற இயேசு, கடவுளின் ஆவி தம்மீது இறங்கி வருவதைக் கண்டார்.  

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 13-17

அக்காலத்தில் இயேசு யோவானிடம் திருமுழுக்குப் பெறக் கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார். யோவான், “நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர்?” என்று கூறித் தடுத்தார்.

இயேசு, “இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை” எனப் பதிலளித்தார்.

அதற்கு யோவானும் இணங்கினார். இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவதுபோலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார்.

அப்பொழுது, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

இயேசுவின் திருமுழுக்கு

 

தூய ஆவியாரின் வல்லமை நாசரேத்தூர் இயேசுவின்மேல் பொழியப்பட்டது. ஆதலால், தீய ஆவிகளின் பாதிப்புகளிலிருந்து விடுதலை செய்து, அனைத்து மனிதர்களுக்கும் இயேசு நன்மை செய்து கொண்டே சென்றார்.

 

“ஆண்டவா நீர்த்திரள்களின்மேல் வீற்றிருக்கின்றார்”(திபா.29:03) என்பதை மெய்ப்பிக்கும்  பொருட்டு இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார்.  உடனே, வானத்திலிருந்து கடவுளின் ஆவி அவர்மீது இறங்கியது. மண்ணைச் சார்ந்து தண்ணீர் இருக்கிறது. விண்ணைச் சார்ந்து தூய ஆவியானவர் இருக்கிறார். விண்ணிலிருந்து தூய ஆவியானவர் மண்ணை நோக்கி வரும்பொழுது, நாம் மண்ணிலிருந்து, விண்ணை நோக்கி எழுப்பப்படுகிறோம்.

 

கடவுள் தரும் அழைப்பு “திருமுழுக்கு அனுபவம்”. திருமுழுக்குப் பெற்றோரைக் கடவுள் பாதுகாத்து வழிநடத்துகிறார். அதனால், நாம் இயேசுவின் ஒளி பெற்று, பல்வேறு வகையான சிந்தனைச் சிறைகளிலிருந்து விடுதலை பெற்று, கடவுள் விரும்பும் நீதியை நிலைநாட்டும்வரை, மனம் தளராமல், பணி செய்வதன் வழியாக, கடவுள் நம்மைக் குறித்து பூரிப்படைவார்.

 

முன்னுரை

புதிய ஆண்டின் இரண்டாவது ஞாயிறு பலியாகிய இன்று பங்கேற்க வந்துள்ள உங்கள் யாவரையும் அன்புடனே வாழ்த்தி வரவேற்கின்றோம்.

திருஅவை இன்று இயேசுவின் திருமுழுக்குத் திருவிழாவை கொண்டாடி மகிழ அழைக்கின்றது.

இந்த கொண்டாடத்தில் தான் திரியேக தேவனின் பிரசன்னத்தை உணர நற்செய்தியாளர் அழைக்கின்றார். தந்தை தன்மகனை பெருமைப்படுத்துவதையும், ஆவியானவர் இறங்கி வந்து தங்குவதையும் பார்க்கின்றோம்.

நம்முடைய திருமுழுக்கும் இதே முக்கியத்துவம் பெற்றது தான். நாமும் அவருடைய பிள்ளைகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, ஆவியின் அபிஷேகம் பெற்று, தந்தையினால் சிறப்புற தேர்வு செய்யப்படுகின்றோம். இதனை உணர்ந்து இறைவனை துதிப்போம். நன்றி கூறுவோம். அழைப்புக்கேற்ப வாழ்ந்து சான்று பகர்வோம். அவருடைய மக்களாகவே வாழ்வோம்.

 

மன்றாட்டு

திருஅவையை ஆசீர்வதியும். திருஅவை அன்பர்கள் திருமுழுக்கின் அர்த்தமுள்ள வாழ்வை வாழ்ந்து அதனையே பிறருக்கு போதிக்க வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எமது நாட்டைஆசீர்வதியும். நாட்டை ஆள்வோரையும், அதிகாரிகளையும் ஆசீர்வதியும். தெய்வபக்தி, பயமுள்ள அன்பர்களாக வாழ்ந்து, மக்களை ஏற்றமான வாழ்வில் வழிநடத்தியருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

திருமுழுக்கு பெற்ற அன்பர்கள் நாங்கள், அழைப்புக்கேற்ற வாழ்வின் வழி, என்றும் உம்முடைய மதிப்பிற்குரிய மக்களாக வாழ, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

திருமுழுக்கிலே பெற்ற அருளை பாவ பழைய வாழ்வால் தொலைத்து விடாமல், எச்சரிக்கையோடும், விழிப்போடும் வாழும் அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

Posted in Uncategorized | Leave a comment

இன்றைய வாசகங்கள்

சனி

முதல் வாசகம்

நாம் எதைக் கேட்டாலும் கடவுள் நமக்குச் செவிசாய்க்கிறார்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 14-21

அன்பார்ந்தவர்களே, நாம் கேட்பது கடவுளுடைய திருவுளத்திற்கு ஏற்ப அமைந்திருப்பின், அவர் நமக்குச் செவிசாய்க்கிறார்; இதுவே நாம் அவர்மீது கொண்டுள்ள உறுதியான நம்பிக்கை. நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்குச் செவிசாய்க்கிறார் என்று நமக்குத் தெரியும்.

எனவே, நாம் அவரிடம் கேட்டவற்றைப் பெறுவோம் என்னும் உறுதி நமக்கு உண்டு. பாவம் செய்வோர் சாவுக்குரிய பாவம் செய்யவில்லை என்று கண்டால், அவர்களுக்காகக் கடவுளிடம் வேண்டுதல் செய்யவேண்டும். கடவுளும் அவர்களுக்கு வாழ்வு அருள்வார். சாவுக்குரிய பாவமும் உண்டு. அப்பாவத்தைச் செய்வோருக்காக வேண்டுதல் செய்யவேண்டும் என நான் சொல்லவில்லை.

தீச்செயல் அனைத்துமே பாவம். ஆனால் எல்லாப் பாவமுமே சாவுக்குரியவை அல்ல. கடவுளிடமிருந்து பிறந்தோர் பாவம் செய்வதில்லை என்பது நமக்குத் தெரியும். ஏனெனில் கடவுளிடமிருந்து பிறந்தவர்களை அவர் பாதுகாக்கிறார்.

தீயோன் அவர்களைத் தீண்டுவதில்லை. நாம் கடவுளைச் சார்ந்தவர்கள்; ஆனால், உலகனைத்தும் தீயோனின் பிடியில் இருக்கிறது. இது நமக்குத் தெரியும். இறைமகன் வந்து உண்மையான இறைவனை அறிந்துகொள்ளும் ஆற்றலை நமக்குத் தந்துள்ளார். இது நமக்குத் தெரியும். நாம் உண்மையான இறைவனோடும் அவர் மகன் இயேசு கிறிஸ்துவோடும் இணைந்து வாழ்கிறோம். இவரே உண்மைக் கடவுள். இவரே நிலைவாழ்வு. பிள்ளைகளே, சிலைவழிபாட்டைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

பதிலுரைப் பாடல்

திபா 149: 1-2. 3-4. 5-6ய,9b (பல்லவி: 4ய)

பல்லவி: ஆண்டவர் தம் மக்கள்மீது விருப்பம் கொள்கின்றார். அல்லது: அல்லேலூயா.

1 அல்லேலூயா, ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்; அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள். 2 இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக! சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக. பல்லவி

3 நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக; மத்தளம் கொட்டி, யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக! 4 ஆண்டவர் தம் மக்கள்மீது விருப்பம் கொள்கின்றார்; தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு வெற்றி அளித்து மேன்மைப் படுத்துவார். பல்லவி

5 அவருடைய அன்பர் மேன்மை அடைந்து களிகூர்வராக! மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவராக! 6ய அவர்களின் வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும். 9b இத்தகைய மேன்மை ஆண்டவர்தம் அன்பர் அனைவருக்கும் உரித்தானது. அல்லேலூயா! பல்லவி

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 4: 16

அல்லேலூயா, அல்லேலூயா! காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடரொளி உதித்துள்ளது. அல்லேலூயா.

 

நற்செய்தி வாசகம்

மணமகனின் தோழர் அவர் சொல்வதைக் கேட்டு பெருமகிழ்வடைகிறார்.  

+ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 22-30

அக்காலத்தில் இயேசுவும் அவர்தம் சீடரும் யூதேயப் பகுதிக்குச் சென்றனர். அங்கே அவர் அவர்களோடு தங்கித் திருமுழுக்குக் கொடுத்து வந்தார். யோவானும் சலீம் என்னும் இடத்துக்கு அருகில் உள்ள அயினோனில் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஏனெனில் அங்குத் தண்ணீர் நிறைய இருந்தது. மக்கள் அங்கு சென்று திருமுழுக்குப் பெற்று வந்தார்கள். யோவான் சிறையில் அடைக்கப்படுமுன் இவ்வாறு நிகழ்ந்தது. ஒரு நாள் யோவானின் சீடர் சிலருக்கும் யூதர் ஒருவருக்கும் இடையே தூய்மைச் சடங்குபற்றி விவாதம் எழுந்தது.

அவர்கள் யோவானிடம் போய், “ரபி, யோர்தான் ஆற்றின் அக்கரைப் பகுதியில் உம்மோடு ஒருவர் இருந்தாரே! நீரும் அவரைக் குறித்துச் சான்று பகர்ந்தீரே! இப்போது அவரும் திருமுழுக்குக் கொடுக்கிறார். எல்லாரும் அவரிடம் செல்கின்றனர்” என்றார்கள்.

யோவான் அவர்களைப் பார்த்து, “விண்ணிலிருந்து அருளப்படா விட்டால் எவரும் எதையும் பெற்றுக்கொள்ள முடியாது. `நான் மெசியா அல்ல; மாறாக அவருக்கு முன்னோடியாக அனுப்பப்பட்டவன்’ என்று நான் கூறியதற்கு நீங்களே சாட்சிகள். மணமகள் மணமகனுக்கே உரியவர். மணமகனின் தோழரோ அருகில் நின்று அவர் சொல்வதைக் கேட்கிறார்; அதில் அவர் பெருமகிழ்ச்சி அடைகிறார். என் மகிழ்ச்சியும் இது போன்றது. இம்மகிழ்ச்சி என்னுள் நிறைந்துள்ளது. அவரது செல்வாக்குப் பெருக வேண்டும்; எனது செல்வாக்குக் குறைய வேண்டும்” என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

 

சிந்தனை

அற்புதமான உதாரணம் மணமகனின் தோழரோ அருகில் இருந்து மணமகனட் சொல்வதைப் கேட்டு மகிழ்ச்சியடைகின்றார்> என்னுடையதும் இத்தகையதுவே என்கின்றார்.

நாம் மணமகனாகிட முடியாது. கிறிஸ்து இயேசுவே மணமகன். தாய் திருச்சபை மணவாட்டி. நாம் எல்லாருமே மணமகனின் தோழர்களே. இதிலே நாம் மனமகிழ்ச்சியடையலாமே ஒழிய> பெருமைப்பட ஒன்றுமே இல்லை. அவரே பெருமைக்குரியவர்.

இந்த மனநிலையே நமதாகிட வேண்டும்.

Posted in Uncategorized | Leave a comment

இன்றைய வாசகங்கள்

வெள்ளி

முதல் வாசகம்

இயேசு இறைமகன் என்று தூய ஆவியும் நீரும் இரத்தமும் சான்று பகர்கின்றன.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 5-13

அன்பார்ந்தவர்களே, இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்? நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் நீரால் மட்டும் அல்ல. நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் என தூய ஆவியார் சான்று பகர்கிறார். தூய ஆவியாரே உண்மை.

எனவே சான்று அளிப்பவை மூன்று இருக்கின்றன. தூய ஆவியும் நீரும் இரத்தமுமே அவை. இம்மூன்றும் ஒரே நோக்கம் கொண்டவை. மனிதர் தரும் சான்றை நாம் ஏற்றுக்கொள்கிறோமே! கடவுள் தரும் சான்று அதைவிட மேலானது அன்றோ! கடவுள் தம் மகனுக்குச் சான்று பகர்ந்துள்ளார். இறைமகன் மீது நம்பிக்கை கொண்டுள்ளோர் இச்சான்றைத் தம்முள் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், கடவுள்மீது நம்பிக்கை கொள்ளாதோர் அவரைப் பொய்யராக்குகின்றனர். ஏனெனில் தம் மகனைக் குறித்து அவர் அளித்த சான்றை அவர்கள் நம்பவில்லை. கடவுள் நமக்கு நிலைவாழ்வை அளித்துள்ளார். இந்த வாழ்வு அவர் மகனிடம் இருக்கிறது.

இதுவே அச்சான்று. இறைமகனைக் கொண்டிருப் போர் வாழ்வைக் கொண்டுள்ளனர்; அவரைக் கொண்டிராதோர் வாழ்வைக் கொண்டிரார். இறைமகனிடம் நம்பிக்கை கொண்டுள்ளோருக்கு நிலைவாழ்வு உண்டு என நீங்கள் அறிந்துகொள்ளுமாறு உங்களுக்கு இவற்றை எழுதுகிறேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

பதிலுரைப் பாடல்

திபா 147: 12-13. 14-15. 19-20 (பல்லவி: 12)

பல்லவி: எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! அல்லது: அல்லேலூயா.

12 எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக! 13 அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார். பல்லவி

14 அவர் உன் எல்லைப் புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்; உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார். 15 அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது. பல்லவி

19 யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார். 20 அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை. அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது. பல்லவி

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 4: 23

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா.

 

நற்செய்தி வாசகம்

தொழுநோய் அவரை விட்டு நீங்கிற்று.  

+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 12-16

அக்காலத்தில் இயேசு ஓர் ஊரில் இருந்தபோது, உடலெல்லாம் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் வந்தார். அவர் இயேசுவைக் கண்டு அவர் காலில் விழுந்து, “ஆண்டவரே, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என மன்றாடினார்.

இயேசு கையை நீட்டி, அவரைத் தொட்டு, “நான் விரும்புகிறேன்; உமது நோய் நீங்குக!” என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்கிற்று. இயேசு அவரிடம், “இதை யாருக்கும் சொல்ல வேண்டாம். நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்” என்று கட்டளையிட்டார்.

ஆயினும் இயேசுவைப் பற்றிய செய்தி இன்னும் மிகுதியாகப் பரவிற்று. அவரது சொல்லைக் கேட்கவும் தங்கள் நோய்கள் நீங்கி நலம் பெறவும் பெருந்திரளான மக்கள் அவரிடம் கூடிவந்துகொண்டிருந்தார்கள். அவரோ ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்குச் சென்று தனித்திருந்து இறைவனிடம் வேண்டிவந்தார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

 

சிந்தனை

பிரபலியம் ஆவது இன்றைய சமுதாய நோக்கமாகவே இருக்கின்றது. விளம்பரம் தேடும் உலகமாக மாறி வருகின்றது சமூகம். எதற்கும் இன்றைக்கு டிஜிட்டல் பேனர் கட்டி விளம்பரம் தேட நினைக்கின்ற உலகமாக மாறி வருகின்றது.

அரசியல்வாதிகள் தான் தங்களை அடையாளம் காட்டிக் கொள்ள முற்படுகின்றார்கள் என்றால் திருமணம், காது குத்து என எல்லா காரியங்களுக்கும், திருச்சபை இதற்கு எதற்கும் விலக்கல்ல என போட்டி போட்டு இன்றைக்கு தெருக்களை அலங்காரமாய் அல்ல அசிங்கப்படுத்தி வருவதைப் பார்க்கின்றோம். இது எதுவுமே தவறு அல்ல என்ற மனோபாவமும் பெருகி வருகின்றது.

யாரிடமும் இதனை பிரபலியம் செ;யதிட வேண்டாம் என சொல்லுவது இன்று நமக்கு என்ன செய்தியை சொல்லுகின்றது. எத்தகைய பணிகளையும், ஆடம்பரம் இன்று விளம்பரம் தேடாது செய்ய முன்வருகின்ற போதே நாம் பெருமைப்படுத்தப்படுவோம் அழைத்தவரால்.

 

Posted in Uncategorized | Leave a comment